Friday, May 10, 2013

எங்கே தவறு செய்கின்றோம்???....


இன்று +2 முடிவுகள் வெளியாகியுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதே நேரம் இன்று காலைப்பத்திரிகையில் காலமானாருக்கு பக்கத்தில் மடித்து சொருகப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தை நம்மில் பலர் கவனித்திருக்க மாட்டோம். அது ஒரு நிறுவனத்தின் விளம்பரம். அது என்ன நிறுவனம், யாரால் நடத்தப்படுகிறது என்ற விவரங்கள் இல்லாத விளம்பரம். இது போல பல அநாதை விளம்பரங்கள் தினம் பார்ப்பதால் நாம் எளிதில் தாண்டிச்சென்றிருப்போம். ஆகவே நின்று ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தைப் பாருங்கள்.



தனியார் கல்வி நிறுவனங்களின் சீட்டுகள் விற்கப்படும் என்பது ஒரு ஊரறிந்த ரகசியம். ஆனால் அதை விளம்பரம் செய்து விற்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இதைப்படிக்கும் போது பல கேள்விகள் எழுகின்றன. 

யார் இந்த நிறுவனம்?



இவர்களின் வெப்சைட்டில் Educational Consultants என்று போட்டிருக்கிறது. அனைத்து பெரிய தனியார் கல்வி நிறுவனங்களையும் தங்களின் பார்ட்னர் என்று போட்டிருக்கிறார்கள். அந்த பக்கத்தில் ஆகாயத்தை வளைப்போம் போன்ற இவர்களின் வாக்குறுதிகளை கழித்து விட்டுப் பார்த்தால் கவனத்தை ஈர்ப்பது ஒன்றுதான். வலது மூலையில் உள்ள Agent Login பட்டன். எதற்கு ஏஜென்ட் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவர்களின் ஆபீஸ் எங்கே? எப்படி இத்தனை நிறுவனங்களிடம் தொடர்பு உள்ளது? இவர்களின் செயல்பாடுகள் எப்படி? எப்படி மார்க் குறைந்த மாணவர்களுக்கு சீட் வாங்கி தருகிறார்கள்? அப்படி பெயில் ஆகி சீட் advance booking செய்து படிக்கும் மாணவர்கள் எந்த லட்சணத்தில் MBBS படிப்பார்கள்? என்ற பல கேள்விகளுக்கு அந்த வெப்சைட்டில் பதிலில்லை.

இவற்றை வைத்து யோசிக்கும் போது இரண்டு சாத்தியங்கள்தான் தோன்றுகிறது. ஒன்று இது ஒரு டூபாக்கூர் நிறுவனம். ஏமாந்த மாணவர்களிடம் காசு வாங்கி விட்டு ஏமாற்றி விடுவார்கள். அப்படியென்றால் இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிந்து நடக்கிறதா? காரணம் சீட் வாங்கி தரேன் என்று சொல்பவர் ஒரு முறை கூட அந்த கல்லூரிக்கு கூட்டி செல்லாமலா ஏமாற்ற முடியும்?

இல்லை இது உண்மையான நிறுவனம் என்றால் இது போன்ற அப்பட்டமான சட்ட மீறலை எப்படி அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்? தனியார் நிறுவனங்களும் தங்களிஷ்டப்படி சீட்டுகளை நிரப்ப முடியாது....கூடாது....என்று பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு ஒரு நிறுவனம் விளம்பரம் செய்கின்றது என்றால் அதற்கு அதிகார வர்க்கத்தின் ஆசி எந்தளவுக்கு உள்ளது?

இறுதியாக ஒரு கேள்வி – இப்படி ஒரு விளம்பரம் ஒரு முன்னணி பத்திரிக்கையில் வருகிறது. இதை படித்த யாராயிருந்தாலும் அயோக்கியத்தனம் என்று உடனே உணர்வார்கள். அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தெரியாதா? எல்லா விளம்பரங்களின் வாசகங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பேற்க முடியாது. ஆனால் அநியாயம் என்று தெரிந்தும் காசுக்காக விளம்பரம் வெளியிடுவது பத்திரிக்கை நெறிப்பிறழ்வு ஆகாதா?

தவறுகளற்ற சமுதாயங்கள் கிடையாது. ஆனால் அந்த தவறுகளை பகிரங்கமாய் நம் சமுதாயத்தில்  மட்டுமே அனுமதிக்கின்றோம்.

எங்கே தவறு செய்கின்றோம்???....

Wednesday, February 27, 2013

சுஜாதா நினைவலைகள்...

"துள்ளல் ஒசைத்தாய், நேரீற்றியற் சீரும், நிறைனடுவாகிய வஞ்சியுரிச் சீரும் வாராது, நிறை முதலாகிய வெண்பா விரிச்சீர்மிக்கு. நேரடித்தாய்க் கலித்தளையும் சுயற்றளையுந் தட்டுத்தரவு. தாழிசை எண்ணும் முதல் உறுப்பும் அராகம், அம்போதரங்கம். தனிச்சொல், சுரிதகம் எண்ணும் துணை உறுப்பும் உடைத்தாய் ஒத்தாழிசைக்கலி...."

மன்னிக்கவும். தமிழ்நடை எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை விளக்க இந்த வாக்கியம் (இன்னும் வாக்கியம் முடியவில்லை) யாப்பருங்கலக் காரிகைக்கு குணசேகரர் என்பவர் இயற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது .

இத்துடன் ஒப்பிட, "நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னையன்றி இலை" என்கிற ஆழ்வார் வரிகளையும்,
எங்கேயோ நாய் ஒன்று குரைத்தது. அதைக் கேட்டு விட்டு இன்னொரு நாய் வேறு தெருவில் குரைத்தது. இரண்டும் வெகு தூரத்திலிருந்து  வந்தது. எதிர் வீட்டு வாசலில் மாட்டின் கழுத்து மணியோசை கேட்டது. விழுந்து வணங்குவது போல் ஒரு கூண்டு அரைவண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த மாடுகளின் மணி சோம்பலுடன் ஒலித்தது..."
என்று மோகமுள் நாவலில் தி. ஜானகிராமன் நம் ஊர் கிராமத்தின் தூக்கமில்லாத இரவின் Mood ஐ சித்தரிக்கும் வரிகளையும் பார்க்கும் போது தமிழ்நடை சில நூற்றாண்டுகளில் வேகமாக வளர்ந்திருப்பதைக் காணலாம். தமிழ் வளரவில்லை, வளரவே இல்லை, தேங்கியே இருக்கிறது என்று பல்லவி பாடும் விமர்சகர்கள் தம் ஆயுளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு பார்க்காமல் பல்லாயிரம் ஆண்டுள்ள மொழியின் ஆயுளை வைத்துப் பார்க்க வேண்டும்.

எழுதிய வருடம் - 1966.

இத்துடன் 2005ல் சுஜாதா எழுதிய தன் எழுபது வயது நிறைவடைவதை பற்றிய  விகடன் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். தமிழ் நடையை எவ்வளவு தன் வாழ்நாளில் மாற்றியுள்ளார் என்று புலப்படும்.

இன்றுடன் தமிழ் அவரை இழந்து ஐந்து வருடங்களாகின்றன.

மாற்றம் மட்டுமே சாஸ்வதம் என்பதை புரிந்து இறக்கும் வரை அந்தந்த காலக்கட்டத்திற்கு தன்னை மாற்றிக் கொண்ட அவரை போன்ற இன்னொருவர் வருவாரா?

ஒரு வேளை இந்த ஒரு இழப்பு மட்டுமே சாஸ்வதமோ????....