Monday, May 7, 2012

ஒரு சட்டமும் சில கேள்விகளும்...

கடந்த வாரம் நம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி நன்றாக பிரியாணி மொக்கி விட்டு விட்டத்தைப்பார்த்து படுத்து பல் குத்திக்கொண்டே NRHM (தேசிய ஊரக வளர்ச்சி திட்டம் ) ஏன் உருப்படாமல் போகிறது என்று யோசிக்கும் பொழுது டொய்ங் என்று அவருக்கு ஒரு பல்பு உதிக்க "எடுறா பேப்பரை" என்று ஒரு உத்தரவு போடுகிறார்.

"இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால் நம்மூர்ல படிச்சுப்புட்டு அடிச்சு பிடிச்சு எப்படியோ வெளியூர் படிக்க போகிற பயபுள்ளைங்க திரும்பாம அங்கனையே தங்கிடறாங்க. இதனால நம்ம கிராமத்துல வேல பாக்க ஆள் இல்லாம போய்டுச்சு. போன வருஷம் மட்டும் படிச்ச 1,20,000 பேர்ல 3000 பேர் வெளிய போய்ட்டாங்க. அதுல 30% திரும்பியும் வந்துட்டாங்க. இருந்தாலும் போன 70% பேரால நம்ம ஊர் ஜனங்களுக்கு எம்புட்டு எழப்பு... இதனால பெரியவங்கலாம் ( வேற யாரு அண்ணன்ந்தேன்....) யோசிச்சு(!!!!) இனி அமெரிக்கா படிக்க போற டாக்டர்ல்லாம் உங்க சொத்த எழுதிக்கொடுத்துட்டு (Bond எழுதி கொடுத்து விட்டு) போய்டணும்" என்று தண்டோரா போடு விட்டார்.

நகைச்சுவை தவிர்த்து பார்த்தால் இது எந்த லட்சணத்தில் நம் நாட்டின் அதிகாரிகளும் அமைச்சர்களும் இயங்குகின்றனர் என்று தெரிய வைக்கும் ஒரு ஆணை. இது எழுப்பும் கேள்விகள் பல.

இந்த ஆணை வெளிநாடு செல்லும் மருத்துவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என் கேள்வி ஏன் மற்ற வேலை செய்பவர்களில் யாரும் வெளிநாடு செல்லவில்லையா? உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளவர்கள் மற்றவர்கள்தான். அவர்களை விட்டுவிட்டு மருத்துவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? அது சரி அமெரிக்கா செல்லும் மருத்துவர்களை கட்டுப்படுத்துவீர்கள்... NOC கேட்காத ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அரபு நாடுகளுக்கு போகும் மருத்துவர்களை என்ன செய்வீர்கள்...

வெளிநாடு சென்று வாழும் இந்தியர்களுக்கு உந்துதல் ஏது? யாரும் தன் சொந்தங்களை மண்ணை விட்டு சென்று மொழி புரியாத மனிதர்களுடன் போராட விரும்பி செல்வதில்லை. இங்கே காட்டப்படும் அநியாயமான பாகுப்பாடும் திறமை இருந்தும் போட வேண்டிய எதிர்நீச்சல்களுமே அவர்களை அந்நிய மண்ணின் சுகங்களை பெரிதாக எண்ண வைக்கிறது. அதை தீர்க்காமல் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடுவது தங்களின் தொலைநோக்கு பார்வையின்மையை மறைக்க இவர்கள் நடத்தும் நாடகங்களே தவிர வேறொன்றுமில்லை. 2100 மருத்துவர்கள்தானா படித்தவர்கள். மிச்சமுள்ள 117900 பேர் கொண்டு நம் கிராமங்களை முன்னேற்ற முடியாதா?

சரி... இவர் சொல்வது போல் சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை எங்கே வேலைப்பார்க்க சொல்கிறார். எந்த வசதியுமில்லாத கிராமப்புறங்களில் இவர்களால் வேலைப்பார்க்க முடியுமா. அது மயிலை பாட சொல்வது போன்று முரணான விஷயமில்லையா? நோபல் பரிசு பெற்ற ஹர்கோபிந்த் குரானா, ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கேற்ற வசதிகளை நாம் இங்கே ஏற்படுத்தி விட்டோமா? அதில்லாமல் அவர்களை செல்ல விடாமல் தடுத்திருந்தால் அது மனிதக்குலத்துக்கு அவர்களின் அர்ப்பணிப்பை தடுக்கும் செயலாகியிருக்காதா? 

இது போன்ற அர்த்தமில்லாத சட்டம் இயற்றுவத்தின் மூலம் நம் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத்திருப்பி சுவிஸ் வங்கிகளில் பணத்தை குவிக்கும் அரசியல்வாதிகளை விட தன் வாழ்க்கையின் நலனுக்காக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் எவ்வளவோ மேல்...

சரிதானா....

சிந்தனை செய்யுங்கள்....

2 comments:

  1. boss ...தங்கள் எழுத்து நடையில் நிறைய மாற்றம் ....இந்த தலைப்பு மிக்க அருமை ...சிந்தனை செய்வோம்...pidikkathavangala ''நிந்தனை செய்வோம் ....உங்க ப்ளாக் ரொம்ப பிடிக்குது ...அதனால் ''வந்தனை செய்றோம்''....

    ReplyDelete

உங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...